சனிப்பெயர்ச்சி பலன்கள்

 

ரிஷப ராசி நேயர்களுக்கு (2014 To 2017)

இதுவரையில் கிரக சஞ்சார நிலவரம், பெருமளவு சமாளிப்பதற்கும் ஓரளவு சாதனை செய்வதற்கும் கூட உதவியிருக்கிறது என்று சொல்லலாம். பாபகிரகமான சனிபகவான் 2வருடங்களுக்கும் மேலாக 6ம் இடத்தில் சஞ்சரித்து வருவதே பாதுகாப்புதானே. பக்கபலம்தானே. உழைப்புக்கும் தொழிலுக்கும் அது உறுதுணையான அமைப்புதானே. ஆனால், சில மாதங்களுக்கு முன்ராசி மாறிய கிரகங்களில் கேது உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், குருவும் சரி, ராகுவும் சரி, குழப்பமும் குதர்க்கமும் தரும் குணங்களோடுதான் நடமாடிவருகிறார்கள். இவர்களைவிட, ஒவ்வொரு ராசியிலும் அதிகப்பட்ச காலம் சஞ்சரிக்கக்கூடிய சனிபகவான் சமீபத்தில் ராசி மாற இருக்கிறார்.

சனிபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி 16-12-2014  ( ஐய வருடம், மார்கழி மாதம், 1 ஆம் நாள் ) செவ்வாய்கிழமை பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

உங்களைப் பொறுத்தவரையில் 2வருடங்களுக்கும் மேலாக உங்கள் ரிஷபராசிக்கு 6ம் இடத்தில் துலாராசிக்கும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான், இப்பொழுது 7ம் இடமான விருச்சிக ராசியில் அடியெடுத்து வைக்கிறார். இப்படி ராசி மாறிவருகிற சனிபகவானுக்கு சந்தோஷமாக வரவேற்பு கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை. ஏனென்றால், 7இடத்துக்கு வரும் சனியால் கண்டச்சனியின் காலம் ஆரம்பமாகிறது. இதுவரையில் சனி சஞ்சரித்துவரும் 6ம் இடத்தில்தான் இடைஞ்சல்களையெல்லாம் எப்படி எப்படி சமாளித்துச் சரிகட்டிகொண்டுவருவது என்று அனுபவத்திலேயே தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், இனி 7ம் இடத்தில் சனியின் குணம் எப்படியெல்லாம் மாறும், இனிமேல் அவரால் என்னென்ன விதமாகவெல்லாம் பலன்கள் நடைபெறும் என்பதைப் பொதுப்பலனாகத் தெரிந்து கொள்ளும்போது, திருப்திப்பட்டுக் கொள்ள முடியாதுதான் சாதகச் சனியை இனி சங்கடச் சனியாக – கண்டச் சனியாகப் பார்க்கிறபோது சஞ்சலப்பட்டுக் கொள்ளும்படியாக வருவது சகஜம்தான்.

ரோக காரகனான சனி ஏடாகூடமாக 7ம் இடத்திலே சஞ்சரிக்கிறபோது ஆரோக்கியம் குறைவது சகஜம்தான். உடம்பை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறை குறைந்துபோகும். அங்கும் இங்குமாக அலைவது, பொறுப்புகளை அதிகப்படுத்திக்கொண்டு போராடுவது, சரியான சமயத்துக்குச் சாப்பிடாமல் நேரம் கடத்துவது, உழைப்புக்கு ஏற்றப்படி ஊட்டமாகச் சாப்பிடாமல் எதையாவது ஒப்புக்கு உள்ளே தள்ளுவது, இரவு அதிகநேரம் கண் விழித்துத் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்வது, உடல்நலத்துக்கு ஒத்துக்கொள்ளாத சில பழக்கங்களை ஒதுக்காமல் இன்னும் நீடித்துக்கொண்டிருப்பது, இவையெல்லாம் ஆரோக்கியத்தைக் குறைக்கும். கடுமையான வேலைகளும் அலைச்சல்களுமாவது உளைச்சல்களை உண்டாக்கும்.

7ம் இடத்து சனி நேர்ப் பார்வையாக உங்களுடைய ஜென்மராசியைப் பார்ப்பதுகூட அடிக்கடி டல்லடிக்க வைக்கும். அலுப்பு, அசதி, மசமசப்பு, கசகசப்பு என்று கொடுத்து மந்தப்படுத்தும். உடம்பின் நிறத்தையே மங்க வைக்கும். இயற்கையாகப் பிரகாசமாக இருப்பவர்களுக்குக்கூட, வெய்யில் அதிகம் படுவதாலோ, குளிக்கும் தண்ணீர்ன் மாற்றத்தாலோ, அலைகழிப்புகளும் கண் விழிப்புகளும் அதிகப்படுவதாலோ, மேனியின் மினுமினுப்பு குறையும். சற்றே நிழல் படிந்தாற்போல கருமை தென்படும். ஏற்கனவே பளிச்சென்று இருப்பவர்களும்கூட தலைக்குச் சரிவர எண்ணெய் வைக்காமலோ, அடிக்கடி வியர்வை வழியவிட்டுக் கொண்டோ, பொதுவாக அலங்கார விஷயங்களில் போதுமான நாட்டம் இல்லாமலோ, மலர்ச்சி இல்லாமல் அடிக்கடி தளர்ச்சியாகக் காட்சியளிப்பது வழக்கமாகும்.

படிக்கிற பிள்ளைகளுக்குப் படிப்பே ரொம்பக் களைப்படைய வைத்துவிடும். தெம்பாக ஏறுகுதிரைபோல் நடக்கும் வாலிபர்களிடமும் வேலைப்பளுவால் உண்டான வாட்டம் தளைநடை போட வைக்கும். வேலை இல்லாமலும், வேலை தேடியும் சுற்றுகிற இளவட்டங்கள், வாடிய செடிகளாகத் துவண்டு தெரிவது சகஜம்.

புதிதாகக் கிடைக்கும் வேலையோ, ஏற்கனவே இருக்கிற உத்தியோகமோ, உங்கள் உழைப்பை அதிகப்படியாகவே உறிஞ்சிக் கொண்டு உபத்திரவப்படுத்தும்.சுயதொழில், சிறுத்தொழில் என்று ஆரம்பிப்பதென்றாலும், தொழில்காரகனான சனியின் ஒத்துழைப்பு அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. முன்னதாகத் தொழில் துறையில் இறங்கியிருப்பவர்களும் எதிர்நீச்சல் போடுவது போலத்தான் எதையும் இடைஞ்சல்பட்டு நடத்திக்கொள்ளும்படியாகும். சனிபகவான் வேலையே இல்லாமல் முடக்குவார் அல்லது வேலையைக் காரணமாக வைத்தே வேதனைப்படுத்திவிடுவார்.

பொதுவாக 7ம் இடமே களத்திர ஸ்தானம் என்பதால், அங்கு நடமாடுகிற சனிகாலகாலத்தில் கைகூடாமல் காலத்தைக் கடத்துவார் அல்லது கல்யாண வேலைகளிலாவது தடை தாமத சிரமங்களைக் கொடுத்துத் தன்னுடைய கெட்ட சுபாவத்தைக் காட்டிவிடுவார். ஏற்கனவே தம்பதிகளாகிவிட்டவர்களுக்கும் 7ம் இடத்துச் சனியின் இதமான ஒத்துழைப்பு கிடையாது. கணவன் மனைவிக்கிடையில் அலுப்பு, சலிப்பு, கசப்பு, கடுப்பு,தொந்தரவுகளும், அசௌகரியக் குறுக்கீடுகளும், இணக்கத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும்.

பிள்ளைகளை முன்னிட்ட பொறுப்புகளும் பிரச்சனைகளும், ஏற்கனவே உள்ள இடைஞ்சலான வேலை நிலவரத்துக்கிடையில் ஊடுருவி நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும். பணவருமான வசதி வாய்ப்புகளுக்கும் 7ம் இடத்துச் சனியின் சஞ்சாரம் ஏற்றதான ஏற்றமான அமைப்பல்ல. பணம் சம்பாதிப்பதற்கும் சரி, தேவைகளிக்கேற்ற பணத்தை உருட்டிப் புரட்டுவதிலும் சரி, பணத்தை முன்னிட்ட விவகாரங்களைச் சரிக்கட்டுவதிலும் சரி, சனியின் இயக்கம் சங்கடம், சஞ்சலம் என்று கொடுக்கக் கூடியதே.

சனியின் ஒரு தீயபார்வை, சொத்து சுக ஸ்தானத்தின்மீது விழுகிறது. இதனால் வீடு, மனை, தோட்டம், துரவு, பயிர்நிலம், கடை, அலுவலகம், தொழில் நிறுவனம், இப்படி இடம், சொத்து பத்துகள், குளறுபடிகள், அதிருப்திகள், அவதிப்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.

வாடகை வீடானால் வசதிக் குறைச்சல், காற்றோட்டக் குறைவு, தண்ணீர்த் தட்டுபாடு, வீட்டு உரிமையாளார்களின் கெடுபிடி, வாடகை அதிகரிப்பு, இப்படி ஏதாவது ஏற்படலாம் அல்லது மனை வாங்கத் தடங்கல், காலியிடத்தில் வீடு கட்டும் திட்டம் ஒத்திவைப்பி, கட்ட ஆரம்பித்த வீட்டுக் கட்டுமான வேலைகள் சட்டுபுட்டென்று முடியாமல் இழுபறியாகும். கட்டி முடித்த வீட்டில் ஏதாவது தொட்ட குறை விட்டகுறையாக மீதியிருப்பது, ஏற்கனவே சொந்தமான வீடு இருந்தால் விரிவுபடுத்திக் கட்டுவதற்குத் தள்ளிபோடுவது, கிட்டே இருந்து பராமரிக்க முடியாமல் எட்டியிருப்பது, பழுதுபார்க்கும் வேலைகள் சிரமப்படுத்திக் கொண்டிருப்பது, வீட்டு நிர்வாகம் வருமானத்தில் பெரும் பங்கை விழுங்குவதும், இப்படியெல்லாம் உண்டு. வீடு என்று மட்டுமல்லாமல், இதர சொத்துபத்து வகைகளிலும் இதே மாதிரிதான் நிலவரம்.

7ம் இடத்துச் சனியின் மற்றுமொரு தீய பார்வை பித்ரு பாக்கிய ஸ்தானத்தின் மீது பதிவதால்தான் தகப்பனாருக்கும் சிரமங்கள் உண்டு. இதே சனிப்பார்வை, பெரும் பணவரவு, தானதருமக் காரியங்கள், புண்ணிய ஸ்தல தரிசனங்கள் என்று கிடைப்பதற்கும் முட்டுக்கட்டைகளைப் போடும். மற்றபடி 7ம் இடத்துச் சனியின் சஞ்சாரமும்சரி, அவருடைய தீய தன்மையுள்ள பார்வைகளும் சரி, பாதிப்பான பலன்களை உண்டாகும்.

மொத்ததில் 65 % நன்றாக இருக்கும் .

 பரிகாரம்:

 ஏகாதசி திதிகளில் ஸ்ரீநரசிம்ம சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி 11- தடவை வலம்வரவும் , பசுவிற்கு அகத்திகீரை,வாழைபழம்,வைக்கோல் தானம் செய்யவும்.நரசிம்மரை சனிக்கிழமை தோறும் வழிபட நல்லது நடக்கும்,            For more information, click on the View    

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com