வாழ்க்கை என்றால் என்ன..?

 

நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன? 

உயிர் உடலுக்குள் தங்கி இருக்கும் இந்த ஜென்ம வாழ்க்கையில் - எத்தனையோ எண்ணங்கள் - வாழ்க்கையைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. வாழ்க்கை ஓட்டத்தில் - வெறும் நினைவுகள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் எஞ்சி இருக்கிறது. அவை, நல்லதோ - கெட்டதோ..... வெறுமனே எண்ணங்கள். நினைவுகள் மட்டுமே. 
நல்லதையே நினை. நல்லதையே செய் என்று ரொம்ப சிம்பிளாக வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். ஆனால் என்ன செய்கிறோம்..? ஆடி , அடங்கி, கடைசியில், விழிகள் நிலை குத்தி , நம் சொந்த பந்தம் சுற்றி இருக்க, விடை பெறுகிறோம்... இடையில், நம்மால் முடிந்த அளவு , நம் வாழ்க்கை சிறக்க போராடுகிறோம், நம் குழந்தை, குடும்பம் அவர்களின் நல்லது கெட்டது, கூட வாழும் சொந்த பந்தம், சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பது - இப்படித் தான் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே அடங்கி இருக்கிறது என நினைக்கிறோம்... நிஜமாகவே இதுதான் வாழ்க்கையா..? இல்லை இதைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்க, அதை அறியாமலேயே நம் கூடு அடங்கிவிடுகிறதா...? 

என்ன ஏது என்று தெரியாமலேயே,  வாழ்ந்து முடித்து விடும் அளவுக்கு - வாழ்க்கை ஒரு அற்ப விஷயமா? ஒரு ஜென்ம வாய்ப்பு அல்லவா? அதை நாம் உணருகிறோமா..?  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் , நாம் இப்போது வாழும் வாழ்வில் - எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்...? அந்த விஷயங்கள் எல்லாம் நிஜமாகவே அந்த அளவுக்கு தகுதி வாய்ந்தவையா..? பக்குவம் என்ற பெயரில், இன்று அதி முக்கியமாக இருக்கும் விஷயமே, சில வருடம் கழித்து - ஒன்றும் இல்லாத விஷயமாக தோன்றுகிறதே...? எது நமக்கு நிரந்தரம்..? 

எண்ணங்கள் - எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உணர முடிகிறதா? சின்ன சின்ன விஷயங்களில் நம் ஆற்றல் வீணடிக்கிறோமே..! எத்தனை கோபம், வெறுப்பு, காழ்ப்புணர்வு , அதை ஒட்டிய நம் நேர விரயம், சக்தி விரயம்..! அவசரம், பதட்டம்..! 

மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களுக்காக நம் முயற்சி, நம் அன்றாட வாழ்வில் மிக மிக குறைவே...! ஏன் இப்படி? இப்படியே தான் இருக்கப் போகிறோமா..? 

உங்கள் கருத்து என்ன கொஞ்சம் சொல்லுங்க நண்பர்களே...! 
யோசித்து , உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்..! ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்... என்னுடன், நம் சக வாசக நண்பர்களும்! 

 

அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்...
தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான். அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார். அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று வினவினான். சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா என்று கூறினார்.
இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே என்றான். மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
நிஜமாகவே ஆன்மீகம் என்றால் என்ன..? 
ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்,   இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிர வேறு யாரும் தெரியாது, உன்னை தவிர வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு
நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.  நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும்.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
ALL IS NOT GOD, BUT GOD IS ALL 
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

========================================================
 விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்...!

"Sorry, right-click is disabled." For your purpose using the website

This is a free homepage created with page4. Get your own on www.page4.com